×

அரசுக்கு சொந்தமான இடத்தை ஆட்டைய போட்ட இலை கட்சியினர் கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் தேர்தல் ‘சீட்’டா… வேண்டவே வேண்டாம் என்று ஓட்டம் பிடிக்கிறாராமே பெண் அதிமுக நிர்வாகி…’’ என சிரித்தபடியே கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘குளத்தில்’ முடியும் பெயரை ஊர் கொண்ட  தொகுதியில் நின்ற ‘இலைக்கட்சி பெண் நிர்வாகி’ ஒருவர், 2016ல்  கதர் கட்சி வேட்பாளரிடம் தோற்றார். அப்போது தொகுதிக்குச் சென்றவரிடம், அவரது  ஆதரவாளர்கள், அடுத்த தேர்தலில் ஜெயிக்கலாம் என நம்பிக்கை அளித்துள்ளனர்.  அவரும் மக்களைக் கவர தொகுதியில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினாராம். ‘2021 தேர்தலில் எப்படியும் ஜெயிச்சிடுவேன்’’ என்று சொல்லியே தலைமையிடம்  போராடி சீட் வாங்கினார். இவரது கணவர் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பு  வகிப்பதால், தலைமையும் நம்பிக்கையுடன் சீட் தந்தது. தேர்தலுக்கு முன் அரசு  நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாவட்டத்துக்க வந்த அப்போதைய முதல்வரிடம்,  அழுத்தமாக வேண்டுகோள் வைத்து தனது தொகுதிக்குள் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு  செய்து பங்கேற்க வைத்தார். கடைசியில் இந்தத் தேர்தலிலும், திமுக  வேட்பாளரிடம் 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றாராம். குளத்தூர் ராசி சரியில்லை என்ற மனநிலைக்கு வந்துட்டாராம்.  இதனால்  மிகவும் அப்செட்டில் உள்ளாராம். மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் இவரை  மதிப்பதில்லையாம். ‘2026 தேர்தலில் சீட் கொடுத்தாலும், ‘குளத்து’  தொகுதியில் நிற்கவே மாட்டேன்… ஆள விடுங்க சாமி…’’’’ என தெறித்து ஓடுகிறாராம்…’’ என்றார்  விக்கியானந்தா.‘‘தாசில்தாருக்கு பிஏவாக புரோக்கர் இருக்க முடியுமா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ வெயிலூர் மாவட்டம் அணை தாலுகாவுல முருகனின் மறு பெயர் கொண்டவர் தாசில்தாராக பணியாற்றி வர்றாரு. இவர் தாலுகா அலுவலகத்துல பணிக்கு சேர்ந்த ஆரம்பத்துல சுத்தமானவர் போல காட்டிக்கிட்டாராம். இப்ப தன் சுயரூபத்தை காட்ட தொடங்கியிருக்காராம். அலுவலகத்துல, பணியாற்றி வந்த உதவியாளர் ஒருத்தர் மேல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏதோ புகார் வந்துச்சாம். அதனால அவரை பணியில இருந்து நீக்கிட்டாராம். இப்ப தாலுகா ஆபீஸ் வெளியே மனு எழுதிக்கிட்டிருந்த 3 எழுத்து பெயர் கொண்ட புரோக்கரை கூடவே  வெச்சிருக்காராம். ஏற்கனவே வெயிலூர் தாலுகா அலுவலகத்துல தாசில்தாராக பணியாற்றியபோது இந்த புரோக்கரு, பழக்கமானவராம். இவர் மூலம் மீண்டும் பழைய வேலைகள்ல ஈடுபட ஆரம்பிச்சுட்டாராம். தாசில்தாருக்கு இவர் தான் புரோக்காராக இருந்து பல வேலைகள செய்து வர்றாராம். தாசில்தாரு, கலெக்டர் ஆபீசு, டிஆர்ஓ ஆபீசு, ஆர்டிஓ ஆபீசுன்னு  எந்த ஆய்வுக்கு போனாலும் தன்னோட ஜீப்புல ஓஏக்களை கூட ஏத்தி செல்வதில்லையாம்.  இந்த புரோக்கரைத்தான் கூடவே அழைச்சுகிட்டு போறாராம். இவர் புரோக்கரா… தாசில்தார் பிஏவா…னு அலுவலக ஊழியர்களே கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இப்படி வந்தா… அப்படி பெரிய பதவிக்கு போகலாம்னு பல கோடி சுருட்டியவர்கள்… மீண்டும் ஆரம்ப கட்டத்தில் சேர்ந்த பணிக்கே துரத்தியடிக்கப்பட்டாங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கோவை மாநகராட்சி அலுவலகத்தில், இலை ஆட்சி காலத்தில் 325க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களாக, பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் நியமிக்கப்பட்டாங்களாம். அப்போது, முதல்ல தூய்மை பணியில் சேருங்க… அப்புறம் உங்க பதவியை காட்டி டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றிடலாம்னு சொல்லி பல லகரங்கள் கறந்தாங்களாம். அதை உறுதியாக்கும் வகையில், 25 பேரும், தூய்மை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அலுவலக பணியில் அமர்த்தப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மாநகராட்சி புதிய கமிஷனர், பைல்களை தூசி தட்டி எடுத்து, அனைவரையும் தூய்மை பணிக்கு அனுப்பிவைத்தார். இதேபோல், 103 இளநிலை உதவியாளர் பணியிடமும் அவசர கோலத்தில் நிரப்பப்பட்டது. உதவி கமிஷனர் அந்தஸ்திலான சில அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, பல லட்சம் கைமாற்றி, அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதேபோல், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 4 வருட காலமாக 100-க்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு, கடைசி மூன்று மாதத்திற்கு முன்பாக 46 உதவியாளர்கள், 10 கிராம உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோப்புகளை எல்லாம் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில், ரத்தினமான அதிகாரியும், சாமி பெயர் கொண்டவரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இவர்களைப்போல், வேறு எந்தெந்த அதிகாரிகள் சிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முக்கிய இலை கட்சி பிரமுகர்களும் சிக்க இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு நிலத்தை ஆட்டைய போட்டு, பத்திரப்பதிவு செய்து பல கோடியை பார்த்த அதிகாரிகளும், இலை கட்சி பிரமுகர்களும் கிலியில் இருக்காங்க தெரியுமா…’’ என்று கேள்வி கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘மலைக்கோட்டை  மாவட்டத்தில் கடந்த இலை ஆட்சியில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை  போலி ஆவணங்கள் மூலம் சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு  செய்யப்பட்டதாம். இந்த மோசடியில் இலை கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு  இருந்ததாகவும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக அதற்கான உரிய  ஆவணங்களுடன் பதிவுத்துறை ஐஜிக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  ஆதாரத்துடன் சமீபத்தில் புகார் மனு சென்றதாம்.. இந்த புகார் மனு மீதான  ரகசிய விசாரணை சமீபத்தில் நடத்தப்பட்டதாம்.. வருவாய்த்துறை மற்றும்  மாநகராட்சி அதிகாரிகளின் ஆவணங்கள் படி அந்த இடம் அரசு தரிசு இடம் என  உறுதியானதால் அந்த இடத்திற்கான பத்திரப்பதிவை ரத்து செய்து சட்ட ரீதியாக  நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு மாவட்ட பதிவாளர்  உத்தரவிட்டார். இதுதவிர பத்திரம் எழுதி கொடுத்தவர்கள், எழுதி வாங்கியவர்கள்  மீது சட்ட ரீதியான நடவடிக்கை  எடுக்கவும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க  அதற்கான ஆணையும் பிறப்பித்து கடிதமும்  அனுப்பப்பட்டுள்ளதாம்.. இதனால் அரசு  இடத்தை போலி ஆவணம் தயாரித்து பத்திர பதிவில் ஈடுபட்ட இலைகட்சியை சேர்ந்த  முக்கிய பிரமுகர்கள், உடந்தை அதிகாரிகள் கைது செய்யப்படலாம். மேலும் 50  ஏக்கருக்கும் மேலான அரசு இடங்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திரவு செய்தது   தொடர்பாக பதிவுத்துறை செயலாளர், தலைமைசெயலருக்கும் விவசாயிகள் சங்கம்  சார்பில் மேலும் புகார் சென்றுள்ளதாக  மாவட்டம் முழுவதும்  பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post அரசுக்கு சொந்தமான இடத்தை ஆட்டைய போட்ட இலை கட்சியினர் கிலியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : leaf parties ,kili ,Leaf party ,Seet 'Da ,Yananda ,
× RELATED பள்ளிகளுக்கு விடுமுறையை முன்னிட்டு...